வீட்டில் தனிமையில் இருக்கும்போது செய்யவேண்டியது என்ன?- யூனிசெஃப் நிர்வாக இயக்குநர் தரும் ஆலோசனை

வீட்டில் தனிமையில் இருக்கும்போது செய்யவேண்டியது என்ன?- யூனிசெஃப் நிர்வாக இயக்குநர் தரும் ஆலோசனை
Updated on
2 min read

சமுதாய தனிமைப்படுதலில் வீட்டில் இருப்பவர்கள் வெறுமையாக இருக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை யூனிசெஃப் இயக்குநர் ஆலோசனையாக காணொலியில் வழங்கியுள்ளார். அவரது ஆலோசனையின் தமிழ் வடிவம்:

இதுகுறித்து யூனிசெஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்ரிடா கூறும் அறிவுரை:

வீட்டிலிருந்து வேலை செய்யும் நான்காவது நாள் இது. இன்று உலகம் முழுவதிலுமிருந்து யுனிசெஃப் பணியாளர்கள், மனநலம் மற்றும் ஆரோக்கியம் பற்றி இணையம் மூலமாக ஒரு சந்திப்பில் பேசினோம்.

நம்மில் பலர் பதட்டமாக, சோகமாக, அமைதியாக, மன அழுத்தமாக, குழப்பமாக, சோர்வாக, தனிமையாக அல்லது இது எல்லாம் ஒன்று சேர்ந்தோ கூட உணரலாம்.

எங்கள் பணியாளர்களுக்கான மனநல ஆலோசகர்கள் அவற்றிலிருந்து மீண்டு வர எங்கள் ஒவ்வொருவரையும், எங்களுக்காக, எங்கள் குடும்பங்களுக்காக, எங்கள் அணிகளுக்காக ஒரு ஆரோக்கிய திட்டத்தை உருவாக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

மிகவும் பயனுள்ள சில அறிவுரைகளை எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.

1 - இது எனக்கு மிகவும் கடினமான ஒன்று.

உங்கள் வழக்கமான பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் அல்லது புது வழக்கத்தை உருவாக்குங்கள். சரியான நேரத்தில் உறங்கி, எழுந்து கொள்ளுங்கள். நன்றாக உடை உடுத்துங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், நீராடுங்கள், தலை முடியை ஒழுங்குபடுத்துங்கள், பாத்திரங்கள் சுத்தம் செய்யுங்கள், உங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள் அப்போதுதான் இது குடும்பத்துக்கான திட்டமாகும்.

2 - இது எனக்கு மிகவும் பிடித்த அறிவுரைகளில் ஒன்று.

தொடர்பில் இருங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்களுடன் வீடியோ சாட் செய்யுங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகப் பேசி அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் கேளுங்கள். உடன் வேலை பார்ப்பவர்களுடன், முக்கியமாக அதில் தனியாக வசிப்பவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.

3 - உங்கள் பொழுதுபோக்கு பழக்கங்களை, உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள். பாடல் பாடலாம், படிக்கலாம், சமையல் செய்யலாம், புதிர் விளையாடலாம், தைக்கலாம்.

4 - கவலைப்படுவதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். நாள் முழுவதும் இருக்கும் உங்கள் கவலைகளை எழுதி வையுங்கள். அவற்றைப் பற்றி சிந்திக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். இது மிகவும் பிரபலமான வழிமுறை. இதற்கு பலனும் உண்டு.

5 - உடன் வேலை செய்பவர்களிடையே இந்த அறிவுரை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரோக்கியத்துக்கான பயிற்சிகளில் ஈடுபடுங்கள். தியானம் செய்யுங்கள். மனநலத்துக்கான செயலிகளை பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். அந்த நாளில் எந்த மூன்று விஷயத்தை நீங்கள் நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறீர்கள் என்பதை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு வெகு சிறப்பான நாளை கழித்ததற்காக உங்களுக்கும், மற்றவர்களுக்கும் வாழ்த்து சொல்லுங்கள்.
இசை, குடும்பம், வாசிப்பு, பாடுவது, சிரிப்பது, நம்பிக்கை வைப்பது போன்ற பல விஷயங்கள் ரத்தாகவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றைக் கொண்டாட வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

இன்னும் அறிவுரைகள் வேண்டுமென்றால் unicef.org என்ற தளத்தில் கரோனா வைரஸ் பக்கத்தைப் பாருங்கள். அதில் உங்கள் அறிவுரைகளையும் கூட சேர்க்கலாம். நாம் அனைவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளலாம்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in