

கரோனா வைரஸ் அச்சத்தால் சாட்சிகள் விசாரணை மேற்கொள்ள முடியாது என கோடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் தெரிவித்ததால், வழக்கு விசாரணையை நீதிபதி வடமலை ஏப்ரல் மாதம் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், மற்ற 8 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சாட்சிகளிடம் விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று (மார்ச் 23) நடைபெற்றது. அப்போது, சயான் மற்றும் வாளையாறு மனோஜ் இருவரும் விசாரணைக்கு ஆஜராகினர்.
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக விசாரணையில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேரளாவில் உள்ள குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், சாட்சிகள் பிரதீப், அஜித்குமார் மற்றும் மணிகண்டன் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆனந்த், கரோனா வைரஸ் அச்சத்தால், சாட்சிகளை விசாரிக்கக் கூடாது என நீதிபதியிடம் கோரினார்.
கோரிக்கையை ஏற்ற நீதிபதி பி.வடமலை, வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை சயான் மற்றும் வாளையாறு மனோஜூக்கு நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.