

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நான்குரத வீதிகளில் வேப்பிலை, மஞ்சள் கலந்த எளிய இயற்கை கிருமிநாசினியை தெளித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என்று பொது மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு நாளைக்கு மூன்று முறை கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் கொண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. எனவே, மக்கள் அடிக்கடி கை சுத்திகரிப்பான் (Hand Sanitizer) மூலம் கைகளை கழுவுவதற்கும் வலியுத்தப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனர். தேவையைக் கருத்தில்கொண்டு அவற்றின் விலையை கிருமி நாசினி, கை சுத்திகரிப்பான் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றின் உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ளனர். மேலும் கை சுத்திகரிப்பானுக்கு பல நகரங்களில் கடும் தட்டுப் பாடு நிலவுகிறது.
இந்நிலையில் தண்ணீரில் வேப்பிலை, மஞ்சள் கலந்து எளிய முறையிலான இயற்கை கிருமிநாசினி தயாரித்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நான்குரதவீதிகளிலும் த.மா.கா.,வினர் தெளித்தனர். ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணியின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் முகேஷ் குமார் தலைமை வகித்தார்.
இது குறித்து தா.மா.காவினர் கூறியதாவது: வெந்நீரில் மஞ்சளையும் வேப்பிலை, உப்பினை கலந்து வைத்தால் கிருமி நாசினியாக பயன்படும் என சித்த மருத்துவ ஆலோசனைப்படி இதனை தயார் செய்தோம்.
செயற்கையாக தயாரிக்கப்படும் கிருமி நாசினியில் கெமிக்கல் பயன்பாடு இருக்கும். இயற்கையாகவே மஞ்சள், வேப்பிலை மற்றும் உப்புவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியது, என்றனர்.
எஸ். முஹம்மது ராஃபி