Published : 23 Mar 2020 01:29 PM
Last Updated : 23 Mar 2020 01:29 PM

அப்பாவி மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து கவலைப்படாத அரசுகள்; கரோனாவை விட மிக மோசமான பாதிப்பு: முத்தரசன் குற்றச்சாட்டு

முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 23) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய் தொற்று, நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 410 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதும், 7 பேர் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் மரணமுற்று இருப்பதும் இத்தகைய எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது கண்டு கவலை மற்றும் அச்சத்தை அதிகரித்து உள்ளது.

தமிழ்நாட்டில் பாதிப்பே இல்லை என்று கூறி வந்த தமிழ்நாடு அரசு தற்போது 9 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாசியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சென்னை, காஞ்சி மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை வரும் மார்ச் 31 வரை முடக்கி வைக்க பணித்துள்ளது.

இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களை முழுமையாக சோதித்திட வேண்டும். கரோனா நோய் தொற்று உரியவர்களுக்கு சிகிச்சை அளித்திட தனி மருத்துவமனைகளை உடனடியாக உருவாக்கிட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் வெறும் கைத்தட்டல் மூலம் பாராட்டி மகிழ்தல் போதுமானதல்ல.

தங்களை முற்றாக அர்ப்பணித்து கொண்டு பணிபுரியும் அவர்களை பாராட்டுவது மட்டுமின்றி, அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். குறிப்பாக மற்ற நாடுகளைப் போன்று முழுக் கவசம் அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்கள் அச்சமின்றி, பணியாற்றிட அனைத்து வகை பாதுகாப்பையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழுவீச்சில் அரசு ஈடுபட வேண்டும்.

பாதிப்புகள் எத்தனை நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கும் என்று தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. முற்றாக ஒழிக்கப்படும் வரை முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமுல்படுத்துவதைத் தவிர்த்து வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

நாடே முற்றிலுமாக ஸ்தம்பித்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொழில்களும் முடங்கிப் போன சூழலில் இதனை நம்பி இருக்கும் அப்பாவி மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் இந்நாள் வரை கவலைப்படாமலும், தீர்வு காண உரிய முயற்சிகள் மேற்கொள்ளாத நிலையில் இருப்பது, கரோனா பாதிப்பை விட மிக மோசமான பாதிப்பாகும்.

தினக் கூலி பெறும் மக்களின் வாழ்க்கை முடங்கிக் கிடப்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு அவர்கள் பசியால் பட்டினிச் சாவுக்கு ஆளாகமல் தடுத்து காத்திட அரசுகள் முன்வர வேண்டும்.

அதனைப் போன்று தொழில் நிறுவனங்களின் கடன், அதற்குரிய வட்டி, மின் கட்டணம், வாடகை போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கும் அவர்களைக் காக்கவும், அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முழு ஆண்டு தேர்வை எதிர் நோக்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து தமிழ்நாடு அரசு குழப்பமற்ற தெளிவான முடிவை மேற்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களைப் போன்று 9-ம் வகுப்பு வரை தேர்வை ரத்து செய்து அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பதுடன், 12-ம் வகுப்பு தேர்வுகளை இயல்புநிலை திரும்பும் வரை ஒத்தி வைக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x