

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க போதுமான அளவு கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் இருப்பை உறுதி செய்யக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (மார்ச் 23) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிருமி நாசினி மற்றும் முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு போதுமான அளவு முழு கவச உடை இருப்பில் உள்ளது எனவும், உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் தேவைக்கு ஏற்ப முகக் கவசங்களை உற்பத்தி செய்யலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து, சென்னை, காஞ்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க போதுமான அளவு கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் இருப்பை உறுதி செய்யக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.