

கரோனா பாதிப்பை அடுத்து ஈரோடு மாவட்டத்தை மத்திய அரசு தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தியது ஏன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா பாதிப்பில் இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் மக்கள் மார்ச் 31-ம் தேதி வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்துக் கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 75 மாவட்டங்களில் வரும் 31-ம் தேதி வரை அத்தியாவசியமற்ற சேவைகளை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தைத் தனிமைப்படுத்தியது ஏன் என்று கேள்வி எழுந்தது. தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த சிலர் மார்ச் 12 மற்றும் 13-ம் தேதிகளில் ஈரோட்டில் சுல்தான்பேட்டை மசூதியில் மதப் பிரசங்கம் நடத்தியுள்ளனர். அதன்பின்னர், 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஈரோடு கொல்லம்பாளையத்தில் தங்கியிருந்து மசூதிகளில் மதப் பிரசங்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களில் இருவர் தாய்லாந்து செல்ல முடிவு செய்து, கோவை விமான நிலையம் சென்றுள்ளனர். விமான நிலையத்தில் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அதில் ஒருவருக்குக் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. அவர்களுடன் வந்த மற்றவர்கள் ஈரோட்டில் தங்கியிருப்பது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீஸார் 16-ம் தேதி இரவு கொல்லம்பாளையம் சென்று அங்கு தங்கியிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.
இந்நிலையில், ஈரோடு கொல்லம்பாளையம் மசூதியில் அவருடன் தங்கியிருந்தவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், ''தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்தே ஈரோடு மாவட்டமும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.