

சாலைப் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பாக சென்னை ஐஐடி நிறுவனம் ஹரிதா ஸீட்டிங் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் 40 சதவீத சாலை விபத்துகளுக்கு மனித தவறு அல்லது ஓட்டுநரின் சோர்வுதான் காரணம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ஓட்டுநர்களின் செயல் திறனையும், செயல்பாடு களையும் கண்காணிப்பதற்கான தொழில்நுட்பத்தை ஹரிதா நிறுவனத்துக்கு ஐஐடி வழங்கும். மேலும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்களை உருவாக்கும் பணியில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும்.
இந்த ஒப்பந்தம் குறித்து ஐஐடி பொறியியல் வடிவமைப்புத் துறை பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘‘ஆய்வக அளவில் உள்ள தொழில்நுட்பங்களை பொதுமக்களுக்குப் பயன்படும் வண்ணம் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு இந்த ஒப்பந்தம் நல்ல வாய்ப்பு. இந்திய சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டில் ஐஐடி-யின் பங்களிப்புக்கு இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும்’’ என்றார்.