

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதையடுத்து, நேற்று செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கின்போது, அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. போலீஸார் முழுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சினிமா அரங்குகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் மூடப்பட்டிருந்தன. பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்துகள் நேற்று இயங்கவில்லை. ஏடிஎம், மருந்தகம் போன்றைவை திறந்திருந்தன. சில இடங்களில் உள்ளுர் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர்.
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாமல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி இருந்தன. மக்கள் ஊரடங்கையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்து, ரயில் நிலையங்களில்..
வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் போன்ற இடங்களில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையப் பகுதிகளில் சாலையோரங்களில்அதிக அளவில் ஆதரவற்றோர் உள்ளனர். இவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அவர்களைத் தேடிப்போய் மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கோயில் நகரத்தில்..
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூரில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தொழிற்சாலைகள் இயங்காததால், தொழிலாளர்கள் இன்றி தொழிற்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் இரவு வரையிலும் முற்றிலும் குறைந்து காணப்பட்டது. பால் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே செயல்பட்டன. வியாபாரிகள் அனைவரும் ஒற்றுமையாக கடைகளை மூடியதால் சாலைகள் வெறிச்சோடி இருந்தன. மேலும், தூய்மைப் பணியாளர்கள் காலை 7 மணிக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை முடித்து வீடு திரும்பினர்.
இதேபோல், மதுராந்தகம், செய்யூர், அச்சிறுப்பாக்கம், திருப்போரூர், கல்பாக்கம் ஆகிய பகுதி சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருந்தன. வாகனப் போக்குவரத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும், மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆங்காங்கே போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் சுகாதாரப் பணியாளர் கள் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டனர். சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் அங்கிருக்கும் பொருட்களிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் படுத்தினர்.
மேலும், கோவளம் முதல்கடப்பாக்கம் வரையில் உள்ளமீனவர்கள் கடலுக்குச் செல்லா மல், படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். கடற்கரைக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்ததால், மாமல்லபுரம், கோவளம், சதுரங்கப்பட்டினம், வடபட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் மக்கள் நட மாட்டம் இன்றி காணப்பட்டன.