Published : 23 Mar 2020 06:53 AM
Last Updated : 23 Mar 2020 06:53 AM

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காத்திருந்த 2 ஆயிரம் பயணிகள் முகாமில் தங்கவைப்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காத்திருந்த 2 ஆயிரம் பயணிகள், மாநகராட்சியின் 18 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு வரு கின்றனர்.

பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று முன்தினம் சென்ட்ரல் வந்து நேற்று இரவு பயணிக்க திட்டமிட்டிருந்த பயணிகள் ரயில் நிலையத்திலேயே காத்திருந்தனர். சுய ஊரடங்கு இரவு 9 மணி வரை என்பதால் அதற்கு மேல் இயக்கப்படும் ரயில்களில் பயணிக்கவும் பலர் திட்டமிட்டிருந்தனர்.

வெளிமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் அமர்ந்திருந்த வெளிமாநிலத்தவர்கள். படம்: க.பரத் இதற்கிடையில் நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட 75 மாவட்டங்களை முடக்குவதாக மத்திய அரசு நேற்று மாலை திடீர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 31-ம் தேதி வரை சென்னையில் இருந்து எந்த ரயிலும் புறப்படாது. எந்த ரயிலும் சென்னைக்கு வராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அச்சத்துக்குள்ளாயினர். மேலும், அடிப்படை வசதிகள் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

கனமழை காலங்களில் சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை தங்க வைக்க பல்வேறு நிவாரண மையங்களை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கியுள்ளது. அவ்வாறு தயாராக உள்ள 18 நிவாரண மையங்களில் இவர்களை வரும் 31-ம் தேதி வரை தங்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, ரயில் பயணிகள் அனைவரும் நிவாரண மையங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளை நிவாரண மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு தேவையான வாகன வசதிகள் அனைத்தும் மாநகராட்சி வசம் உள்ளன. அதேபோல் போதுமான மையங்களும் உள்ளன. அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அடுத்த 10 நாட்களுக்கு வழங்கப்படும்’’ என்றார்.

மேலும் 8 ரயில்கள் வருகை

இதற்கிடையே, மேலும் 8 ரயில்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அதில் வரும் பயணிகளும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x