Published : 22 Mar 2020 09:39 PM
Last Updated : 22 Mar 2020 09:39 PM

கரோனா வைரஸ் எச்சரிக்கை நடவடிக்கை: வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எளிய தினக்கூலி மக்களுக்கு ரூ.5000 உதவித் தொகை : மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

முடியாமல் வருமான இழப்பில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலி உழைப்பாளிகள், அன்றாடம் வருமானம் ஈட்டக் கூடியவர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5000/- உடனடியாக வழங்கிட வேண்டும். என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று இன்று நாடுமுழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே இருந்து தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இதைப்போன்று இனி வருங்காலங்களில் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இது மிகவும் அவசியமானது. அதே நேரத்தில் மார்ச்- 31 வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. நோயைக் கட்டுப்படுத்த இது அவசியமானது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சட்டமன்றத்தை நடத்துவதின் மூலம் அரசு மற்றும் அதிகாரிகளின் கவனம் அனைத்தும் சட்டமன்ற பணிகளிலே இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

எனவே, சட்டமன்றக் கூட்டத்தை உடனடியாக ஒத்திவைத்து அரசு நிர்வாகம் முழுவதும் இந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையின்றி குறைந்த விலையில் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை மார்ச் 31 வரை தனிமைப்படுத்தி முடக்கும்படியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் அடங்கும். கரோனா வைரஸ் மேலும் பராவாமல் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும்.

ஆனால் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் சென்னையில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள், காவலர்கள் உள்ளிட்டு பல்வேறு வகைகளில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூரிலிருந்து தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.

எனவே, வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வேலைக்கு செல்ல முடியாமல் வருமான இழப்பில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலி உழைப்பாளிகள், அன்றாடம் வருமானம் ஈட்டக் கூடியவர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 5000/- உடனடியாக வழங்கிட வேண்டும். இதுவரையில் தமிழக அரசு கொரோனா தடுப்பிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்யாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, உணவு வழங்குவது, இலவசமாக முகக் கவசம், கை கழுவும் சானிடேரைஸ் வழங்குவதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கி இலவசமாக மக்களுக்கு வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு அத்தியவாசியப் பொருட்கள் தங்கு தடையின்றி குறைந்த விலையில் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x