

மதுரையில் சுய ஊரடங்கிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் வெறிச்சோடிய சாலைகளில் ‘பைக் ரேஸ்’ இளைஞர்கள் அசுர வேகத்தில் சென்றனர். ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸார் நிற்கும் இடத்தில் மட்டும் மெதுவாக சென்று தப்பிச்சென்றனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்த மக்களும் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினர். அத்தியாவசியம் தவிர்த்து யாரும் வெளியில் வரவில்லை. அரசுத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறையினர், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், ஊடகத்துறையினர் மட்டும் வெளியில் நடமாடினர்.
போக்குவரத்துகள் முற்றிலும் தடை செய்யப்பட்டதால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மதுரையில் சாலைகள் வெறிச்சோடி கிடப்பதை அறிந்த ‘பைக் ரேஸ்’ இளைஞர்கள் பல இடங்களில் அசுர வேகத்தில் சென்றனர்.
அவர்களுக்குள் போட்டி வைத்து ‘யார் முதலில் வருவது’ என அசுர வேகத்தில் சென்றனர். அசுர வேகத்தில் செல்லும்போது யார் குறுக்கிட்டாலும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத வகையில் அதிகபட்ச வேகத்தில் சென்றனர். அதிலும் குறிப்பாக உயர் நீதிமன்ற கிளை உள்ள மேலூர் சாலையில் இன்று அசுர வேகத்தில் இளைஞர்கள் போட்டி போட்டு சென்றனர்.
ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபடும் போலீஸார் நிற்கும் இடங்களை அறிந்து அந்த இடங்களில் மட்டும் மெதுவாகச் சென்றனர். இதனால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் வரவில்லை.
இப்படி ஊரடங்கிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ் சென்ற இளைஞர்கள் இனி வரும் காலங்களிலாவது சிந்தித்து பொது இடங்களில் அசுர வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும், இத்தகைய நாட்களில் அசுர வேகத்தில் செல்லும் இளைஞர்களின் இருசக்கர வாகனங்களின் எண்களைக் குறித்து வைத்து அவர்களை எச்சரிக்கும் வேலையில் போலீஸார் ஈடுபட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.