Published : 22 Mar 2020 09:00 PM
Last Updated : 22 Mar 2020 09:00 PM

அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

3 மாவட்டங்களில் ஊரடங்கு என்பது மட்டும் போதாது மற்ற மாவட்டங்களில் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியாது என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் வைக்கப்பட்டது.

ஆனால், சீனாவில் தானே வந்துள்ளது நமக்கென்ன என்று உலக நாடுகள் பலவும் அலட்சியமாகச் செயல்பட்டன. முக்கியமாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மூலம் இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகள், ஈரான், மேற்காசிய நாடுகளுக்கு வேகமாகப் பரவியது. அமெரிக்காவையும் அது விட்டு வைக்கவில்லை.

தாமதமாக விழித்துக்கொண்ட நாடுகள் மக்களுக்கு விழிப்புணர்வை அளித்தபோதும் தனிமைப்படுத்துதலை அலட்சியப்படுத்திய மக்களால் இன்னும் வேகமாகப் பரவியது.

இதன் விளைவு கரோனாவின் மோசமான மூன்றாவது கட்டமான சமுதாயப் பரவல் கட்டற்றுப் பரவும் நிலைக்கு பல நாடுகள் ஆளாயின. இத்தாலியும், ஈரானும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்,

இரண்டாம் நிலை பரவலில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் மக்கள் மார்ச் 31-ம் தேதி வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்துக் கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் கரோனா தொற்று பரவுவதை தடுக்க ரயில் பிரயாணங்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. தற்போது அண்டை மாநிலங்களிலிருந்து பல மாநிலங்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டன. தமிழகமும் எல்லையை மூடி வாகனங்களை அனுப்பதில்லை.

மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 3 மாவட்டங்களுக்கு கட்டுப்பாட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. அது என்னவகையாக இருக்கும் என்பது இனி அறிவிக்கப்படும். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு ட்விட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:

“கரோனா பாதிப்பை தடுக்க தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் உட்பட இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களில் இம்மாதம் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியாது என்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் இதை நீட்டிக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x