

மதுரை அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை தவிர மற்ற சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட உள்நோயாளிகளை வெளியேற்றும் படலம் தொடங்கியுள்ளது. ‘கரோனா’ நோயாளிகள் அதிகரித்தால் அவர்களுக்கு சிகிச்சை வழங்கவே இந்த ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை 7 பேருக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினமும் தொற்று ஒற்றை இலக்கத்தில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் நோயாளிகள் அதிகரிக்கும்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை.
அரசு மருத்துவமனைகளில் ஏற்கணவே உள்நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதியில்லாமல் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக ‘கரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி சிறப்பு சிகிச்சை வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமே போதுமானதாக இல்லை என்பதால் தற்போது அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் சிகிச்சை தவிர மற்ற சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளை வெளியேற்றும் படலம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளை தள்ளிப்போடலாம் என்கிற நோயாளிகள் இன்று வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘தற்போது மருத்துவத்துறையின் ஒரே சவால் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பது மட்டுமே ஆகும்.
அதனால், உயிர் காக்கும் சிகிச்சைகளை தவிர மற்ற சிகிச்சை நோயாளிகளை டிஸ்சார்ஜ்செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தால் அவர்களுக்கு எளிதாக ‘கரோனா’ தொற்று உள்ளவர்கள் யாராவது வந்தால் பரவ வாய்ப்புள்ளது. அவர்கள் பாதுகாப்பிற்காவே வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம், ’’ என்றனர்.