

கரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து இன்று தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் போடி அரசு மருத்துவமனையிலிருந்து,நோயாளி ஒருவர் மாலை 3.10 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டார்.
மாலை 3. 35 அரசு மருத்துவக்கல்லூரி உள் நோயாளிகள் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டு பின்பு அந்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்தப் பிரிவில் உள்ள உதவி மையம் என்ற இடத்தில் நோயாளி கடந்த காலங்களில் பயணம் செய்த ஊர் விபரங்கள் கேட்கப்பட்டன. மற்றவரிடம் இருந்து 1 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும், முகக் கவசம் போடுதல் உள்ளிட்ட உரிய ஆலோசனைகள் வழங்கப் பட்டது.
இங்கு சாதாரண மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு என இரண்டு பிரிவுகள் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் பாதுகாப்பு கவச ஆடையணிந்த மருத்துவ பணியாளர்கள் உடன் உள்ளனர்.
இங்கு கொண்டுவரப்படும் நோயாளிகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றனர். இதில் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்களை வெண்டிலேட்டர் வசதியுடன் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவர்.
இவர்களுக்கு சுவாசம், மூக்கு ,தொண்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள சளி மாதிரிகள் இங்குள்ள கரோனா வைரஸ் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்யப்படும்.
நோயின் தன்மையைப் பொறுத்து தீவிர சிகிச்சை அல்லது நோயாளிகளின் வீட்டில் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் , மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இம் மாதிரி ஒத்திகையின் போது மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில், பெரியகுளம் சார்ஆட்சியர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்