திருநெல்வேலியில் முழுமையாகக் கடைபிடிக்கப்பட்ட சுய ஊரடங்கு: 100% கடைகள் அடைப்பு- மக்கள் முழு ஒத்துழைப்பு

திருநெல்வேலியில் முழுமையாகக் கடைபிடிக்கப்பட்ட சுய ஊரடங்கு: 100% கடைகள் அடைப்பு- மக்கள் முழு ஒத்துழைப்பு
Updated on
2 min read

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நடைபெற்ற மக்கள் சுய ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலியில் 100 சதவிகிதம் கடைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் சாலைகள் அனைத்தும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு நடத்த பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாமெனவும், வியாபாரிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் விடுமுறை விடவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலியில் மக்கள் சுய ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து 100 சதவிகிதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர், திருநெல்வேலி நகரம் பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகரம் ரத வீதி, பாளை கடை வீதிகள், மேலப்பாளையம் கடைவீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டமில்லை. கண்டிகைப்பேரி, மகாராஜநகர், மேலப்பாளையம் உழவர் சந்தைகளிலும் விற்பனை நடைபெறவில்லை. திருமண மண்டபங்கள், பெரிய வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டிருந்தன.

குலவணிகர்புரம் அருகேயுள்ள சிறைத்துறைக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்படவில்லை. இதர பெட்ரோல் விற்பனை நிலையங்கள் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்பட்டன. ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ்கள் வழக்கம்போல இயங்கின. ஆவின் பாலகங்கள், மருந்து விற்பனை கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. உணவு விடுதிகள், தேநீர் கடை உரிமையாளர்கள் முழுமையாகப் பங்கேற்றனர்.

800 பேருந்துகள்:

திருநெல்வேலி வேய்ந்தான்குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திற்கு தினமும் நெல்லை மாவட்டத்திற்குள் இயங்கும் 300 பேருந்துகளும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்பட வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் உள்பட 500 பேருந்துகளும் வந்து செல்லும். ஒரு பேருந்திற்கு ரூ.15 கட்டணமாக மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் சுய ஊரடங்கு காரணமாக அரசு, தனியார் பேருந்துகள் எதுவும் திருநெல்வேலியில் இருந்து இயங்காததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதிகாலை நேரத்தில் வந்திறங்கிய சில பயணிகள் உணவின்றி தவித்தனர். அவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உணவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

அதிகாலையில் திருமணம்:

பங்குனி மாதத்தின் சிறந்த சுபமுகூர்த்த நாள்களில் ஒன்றான ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. சில இடங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்கள் பங்கேற்ற நிலையில் திருமணம் நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அருள்மிகு பாளையஞ்சாலைகுமாரசுவாமி திருக்கோயில் உள்ளது. இக் கோயிலில் ஏற்கெனவே இம் மாதம் 31 ஆம் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்காக ஏற்கெனவே முன்அனுமதி பெற்றிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 8 ஜோடிகளுக்கு திருமணத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஜோடியுடனும் தலா 4 உறவினர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு திருப்பலிகள் நடைபெறாது எனவும், தனிநபராக வந்து பிரார்த்தனை செய்ய தேவாலயங்கள் திறந்து வைக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொழுகையில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். சிஎஸ்ஐ தேவாலயங்களில் அதிகாலையிலேயே பிரார்த்தனைகளை முடித்துக்கொள்ளவும், பிரார்த்தனைக்கு வருவோர் வீடுகளுக்கு செல்லும்போது கிருமிநாசினி கலந்த நீரில் கை-கால்களை கழுவி சுத்தம் செய்த பின்பு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனர்.

தூய்மைப் பணியாளர்கள்:

மக்கள் சுய ஊரடங்கு நாளிலும் திருநெல்வேலி மாநகராட்சியில் 1200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம்,பேருந்து நிறுத்தங்கள் அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. பேட்டரி வாகனங்களில் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியும் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன், மாநகர நல அலுவலர் சத்தீஷ்குமார் ஆகியோர் ரோந்து சென்று பணிகளைப் பார்வையிட்டு துரிதப்படுத்தினர். மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர், துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் உத்தரவின்பேரில் மாநகர பகுதிகளில் போலீஸாரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in