Published : 22 Mar 2020 07:30 PM
Last Updated : 22 Mar 2020 07:30 PM

மாவட்டங்கள் முடக்கமும் 144 தடையுத்தரவும் ஒன்றா?- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி விளக்கம்

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதால் என்ன நடக்கும்? முடக்கம் என்ற வார்த்தை சரியானதா? 144 தடையுத்தரவு போன்றதா முடக்கம் என்பது குறித்து ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதியிடம் கேட்டபோது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒன்றுகூடாமல் தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும், அடுத்தவருக்கும் பரவாமல் தடுக்க முடியும் என்பது மருத்துவர்களின் வாதம்.

பொதுமக்கள் தனிமைப்படுத்துதலுக்கு ஏதுவாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை, தியேட்டர்கள், மால்கள், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வழிபாட்டுத் தலங்களும் மூட உத்தரவிடப்பட்டது. பொதுமக்கள் மார்ச் 31-ம் தேதி வரை வெளியில் வருவதை கூடியவரை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

சமூகத் தனிமைப்படுத்துதல் என்பதை ஏற்காமல் பொதுமக்கள் பயணம் செய்வதும், ஒன்றுகூடுவதையும் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா பரவலுக்கு எதிராக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்கள், விமான சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானங்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கேட்டுக்கொண்டபடி இன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்கிற கோரிக்கை ஏற்று யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனிடையே இன்று திடீரென புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியா முழுவதும் 75 மாவட்டங்கள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முடக்கம் என்பதைவிட கட்டுப்பாடு என்பதே சரி என்கின்றனர். இதில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களும் அடங்கும். 3 மாவட்டங்கள் முடக்கம் என்றால், அது 144 தடையுத்தரவு போன்றதா என்கிற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

கட்டுப்பாட்டுக்கும் 144 தடையுத்தரவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இது பெரும்பாலும் மக்கள் ஒன்றுகூடுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஒன்று என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

முடக்கம் என்கிறார்களே. அது சரியான வார்த்தையா?

அப்படிச் சொல்ல முடியாது. கட்டுப்பாடு கூடுதலாக விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடு என்றுதான் குறிப்பிட வேண்டும். தற்போதுள்ள நிலையிலிருந்து கூடுதலாக சில நடவடிக்கைகளை இந்த மூன்று மாவட்டங்களிலும் எடுப்பார்கள்.

அப்படியானால் என்ன நடக்கும்?

ஜன நெருக்கம் உள்ள நகரங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நிறைய வெளியூர் ஆட்கள் குவியும் மாவட்டங்கள் என்பதால் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவார்கள். அதாவது அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற விஷயங்களுக்குக் கட்டுப்பாடு வரும். அதாவது பொதுமக்கள் கூடுவதால்தானே இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது, பரவுகிறது. அதனால் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

அப்படியானால் கடைகள் திறப்பது உள்ளிட்ட விஷயங்கள் என்ன ஆகும்?

கடைகள் திறந்து வைப்பதிலும் முக்கியமான அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற விஷயங்களைக் குறைக்க முயல்வார்கள். இதைவிட கார்ப்பரேட் கம்பெனிகள், ஆலைகள் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு. இது தவிர ரயில், போக்குவரத்து மூலம் பரவுவதால் அதன் மூலம் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அத்தியாவசிய சேவை, சிறிய கடைகள் மற்ற விஷயங்களில் கட்டுப்பாடுகள் இருக்காது என்று நினைக்கிறேன்.

அப்படியானால் வெளி மாவட்டத்திலிருந்து வாகனங்கள் வருவதை தடுப்பார்களா?

அனுமதிக்க வாய்ப்பில்லை. மிகவும் கண்காணிப்புடன் இருப்பார்கள். மற்ற மாவட்டங்களிலும் கேட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

அப்படியானால் இதற்கும் 144-க்கும் என்ன வித்தியாசம்?

144 என்பது கடுமையான கட்டுப்பாடு இருக்கும். இது தனிப்பட்ட முறையில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவது. டிராபிக் ரெகுலேஷன் போன்று இருக்கும். 144 -ல் மிகவும் கட்டுப்பாடாக இருப்பார்கள் வெளியில் வந்தால் கைதே நடக்கும். இதில் வேண்டுகோளாக கேட்டுக்கொள்வார்கள். இது மக்களின் நன்மைக்காக போடுவது என்பதால் ஆர்டராக இல்லாமல் வேண்டுகோளாக இருக்கும்.

இதற்கான உத்தரவு வந்துவிட்டதா?

இதுவரை 3 மாவட்டத்துக்கும் வரவில்லை என்கிறார்கள். பொதுவாக வந்துள்ளது என்கிறார்கள். அதில் உள்ள விளக்கங்கள் குறித்து இனிமேல்தான் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது வந்தபிறகே என்ன நிலைப்பாடு என்பது முழுமையாக தெரியவரும்.

சட்டம் போடுகிறார்கள் என்பதற்காக அல்லாமல் பொதுமக்கள் தாமாக நமக்குரிய நன்மைக்கான விஷயம் என்பதை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும். வீண் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x