

வாக்காளர்கள் அதிகரித்துள்ள தால், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் டெல்லி யில் கடந்த 10-ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில், தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடுகளை, முழுமை யாக மின்னணு மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக் கப்பட்டது. இப்பணிகளுக்காக தற்போது 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நானும் இடம் பெற்றுள்ளேன்.
வாக்காளர் பட்டியலை செம் மைப்படுத்தி, விவரங்களை உறுதிப் படுத்தும் திட்டத்தில், ஆதார் எண் களை பெறுவது உச்சநீதி மன்றத் தின் இடைக் கால தடை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றம் இறுதி உத்தரவு பிறப் பிக்கும் போது, இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மறு உத்தரவு பிறப்பிக்கும்.
தமிழகத்தில் செப்டம்பர் 15-ம் தேதி, 64 ஆயிரத்து 94 வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குச் சாவடிகள் வரைமுறைப்படுத்தும் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.
தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை யும் ஒரு சில ஆயிரங்கள் உயர வாய்ப்புள்ளது. வாக்குச்சாவடிகள் வரைமுறைப்படுத்துதல், இறுதி செய்தல், அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டல் போன்ற பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கவனிப்பர். அவர்கள் அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும்.
இதுதவிர, வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் திட்டத்தில், வீடுகளில் இல்லாத, இடம் பெயர்ந்த, இறந்த வாக்காளர்கள் பட்டியலை மீண்டும் சரிபார்க்கும்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.