

மதுவிலக்குப் போராட்டதில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்த தகவல்களை அளிக்க மறுத்ததால், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறையின் தலைவர் பொறுப்பை பேராசிரியர் ராமு மணிவண்ணன் இழந்துள்ளதாக அறியப்படுகிறது.
அண்மையில், மதுவிலக்கு போராட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பட்டியலை அளிக்குமாறு பேராசிரியர் ராமு மணிவண்ணனிடம் பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், மாணவர்கள் பட்டியலை அவர் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று பேராசிரியர் ராமு மணிவண்ணன் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறையின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பட்டியலை அளிக்காத காரணத்தாலேயே நான் பதவி விலகச் செய்யப்பட்டுள்ளேன். எனக்குப் பதிலாக சமகால படிப்புகளுக்காக ராஜீவ் காந்தி என்ற துறையின் பொறுப்பிலிருந்த கோடேஸ்வர பிரசாத், தற்போது அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். என்னிடம் எவ்வித விளக்கத்தையும் கேட்காத பதிவாளர் பொறுப்பை கோடேஸ்வர பிரசாத்திடம் ஒப்படையுங்கள் என்று மட்டும் கூறினார்" என்றார்.
இதற்கு முன்னரும் பல்வேறு தருணங்களில் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் பேராசிரியர் ராமு மணிவண்ணணுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம், பிரதமர் மோடி இலங்கைப் பயணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றதற்காக பேராசிரியர் ராமு மணிவண்ணன் பல்கலைக்கழக துணை வேந்தரின் கோபத்துக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, அவர் போலீஸாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு 3 மணி நேரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் பாய்ந்தது. சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் தலையிட்டு அவரை பாதுகாத்தது.
பின்நாளில் அவர், பல்கலை வளாகத்தில் போதிய கழிப்பறை வசதி இல்லாததையும், குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவுவதையும் சுட்டிக் காட்டினர். இதற்காகவும் அவர் மீது பல்கலை நிர்வாகம் கடிந்து கொண்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தற்போது மதுவிலக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பற்றிய தகவலை அளிக்காததால் பதவி நீக்கத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டார் மணிவண்ணன். இது குறித்து விளக்கம் கேட்க முனைந்த 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழின் சிறப்பு நிருபரின் தொலைபேசி அழைப்புகளையும், குறுந்தகவல்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.