பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடியில் மக்கள் ஊரடங்கு உத்தரவு அமல்: பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடியில் மக்கள் ஊரடங்கு உத்தரவு அமல்: பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

Published on

சுய ஊரடங்கு உத்தரவை ஏற்று இன்று கடைகளை அடைத்து தங்களின் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்தியாவில் கரோனோ வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 285 பேர் கொரானோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த விகிதம் மேலும் பரவாமல் இருப்பதற்கும், வைரஸ் தொற்று சங்கிலித் தொடரை கட்டுக்குள் கொண்டு வரவும் மார்ச் 22-ம் தேதி மக்கள் சுயமாக ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அன்றைய தினம் நாட்டிலுள்ள அனைத்து தனியார் துறை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள், திருமண மண்டபங்கள், விழாக்கள், சந்தைகள், பூங்காக்கள், கடற்கரை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு தேச மக்கள் நலனுக்காக ஒத்துழைப்பு தரவேண்டும் என உரையாற்றியிருந்தார்.

இந்த மக்கள் ஊரடங்கு வேண்டுகோளிலிருந்து பால், காய்கறி, மருந்து, பலசரக்கு போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்யும் சிறுகடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை மக்கள் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், தனியார் நிறுவனத்தினர், தன்னார்வ அமைப்புகள், தன்னாட்சி அமைப்புகள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.

அதன்படி தூத்துக்குடி வாழ் பொதுமக்களும், வணிகர்களும், தனியார் நிறுவனத்தினரும் இந்த சுய ஊரடங்கு உத்தரவை ஏற்று இன்று கடைகளை அடைத்து தங்களின் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் திருநெல்வேலி- பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி -புதிய துறைமுக சாலை, மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளிலும் கடைகள், உணவகங்கள், சந்தைகள், வாடகை கார் நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ஊரே மயான அமைதியுடன் காணப்பட்டது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2 சுழற்சிமுறை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன .மக்கள் அனைவரும் வீட்டிலேயே தொலைக்காட்சி முன்பு முடங்கி கிடந்தனர். சுய ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள அம்மா உணவகங்கள் மற்றும் பால் விற்பனை செய்யும் கடைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in