Published : 20 Aug 2015 09:41 AM
Last Updated : 20 Aug 2015 09:41 AM

உணவுக் கலாச்சார மாற்றத்தால் மவுசு குறைந்த கருவாடு: வருமானமின்றி மாற்றுத்தொழிலுக்கு மாறும் வியாபாரிகள்

தமிழகத்தில் மாறிவரும் உணவுக் கலாச்சாரம் காரணமாக கருவாடு விற்பனை மந்தமடைந்துள்ளது. அதனால், கருவாடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகள், தொழிலாளர்கள் இந்தத் தொழிலைக் கைவிட்டு மாற்றுத்தொழில்களை நாடிச் செல்கின்றனர்.

மீன்களை பதப்படுத்தி வெயிலில் காயவைத்தால் அது கருவாடாக மாறுகிறது. கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உப்பு தடவிவைப்பதால் கருவாடுகளை நீண்ட நாள்கள் வைத்து உண்ணலாம்.

தமிழகத்தில் ராமேசுவரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ருசியான, தரமான கருவாடு தயாரிப்பு தொழில் அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதிகளில் தயாரிக்கப்படும் கருவாடுகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது. குறிப்பாக, இப்பகுதிகளில் தயார் செய்யப்படும் நெய் மீன் கருவாட்டை அசைவப் பிரியர்கள் விரும்பி உண்பர்.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக, மாறிவரும் உணவு கலாச்சாரத்தால் கருவாடு விற்பனை தற்போது மந்தமடைந்துள்ளது.

அதனால் ராமேசுவரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய கட லோர மாவட்டங்களில் கருவாடு தயாரிப்பை மீனவர்கள் குறைத்துக் கொண்டு மீன்கள் ஏற்றுமதிக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதனால், கருவாடுகளுக்கு தற்போது வரவேற்பு குறைந்து வருவதால் வியாபாரிகள் மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை சேர்ந்த வியாபாரி சேகர் கூறியது:

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு கருவாடு சாப்பிட்டால் ஆகாது எனக் கூறுகின்றனர். வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விட்டாலே, ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கருவாடு உண்பதை நிறுத்தி விடுகின்றனர். இன்று, நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் பெரும்பான்மையினருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவர்கள் கருவாடு சாப்பிட அச்சப்படுவது விற்பனைக் குறைவுக்கு முக்கியக் காரணம். இன்றைய இளைய தலைமுறையினர் மீன், பிராய்லர் கோழி, ஆட்டிறைச்சியைத்தான் தற்போது விரும்பி உண்கின்றனர்.

மேலும் குழந்தைகள் கருவாட்டின் மணம், ருசி தெரியாமலேயே வளர்கின்றனர். அதனால், நகர்ப்புறங்களில் கருவாடு விற்பனை முன்புபோல் இல்லை. கிராமங்களில் கருவாட் டுக்கு வரவேற்பு இருந்தாலும், அவற்றை அடிக்கடி உண்ணும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லை. முன்பெல்லாம், குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க வீட்டில் கருவாடு வாங்கி சமைத்துக் கொடுப்பார்கள். இன்று செயற்கையாக சுவையூட்டப்பட்ட ஊட்டச்சத்து மாவுப் பொருட்களை வாங்கி தருகின்றனர்.

இன்றுள்ள பெண்களுக்கு பக்குவமாக கருவாட்டுக் குழம்பு வைக்க தெரியாததால், படித்த இளைஞர்கள் கருவாடு உண்பதையே தவிர்க்கின்றனர். அதனால், முன்பு வாங்கி வந்த சில நாட்களி லேயே விற்று தீரும் கருவாடுகள் இன்று பல வாரங்கள் ஆகியும் விற்பனை ஆகாமல் உள்ளது.

மூன்று தலைமுறையாக செய்து வந்த இந்த கருவாட்டுத் தொழில், எனது தலைமுறையுடன் முடிந்து விடும் போல இருக்கிறது என்றார்.

சர்க்கரை நோயாளிகள் கருவாடு சாப்பிடலாமா?

திண்டுக்கல்லைச் சேர்ந்த சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் முரளிதரனிடம் கேட்டபோது, அவர் கூறியது: பொதுவாக கருவாடுகளை அளவாகச் சாப்பிடுங்கள் என்போம். கருவாட்டில் உப்பு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருந்தால் வாரம் ஒரு முறை அல்லது மாதம் இரண்டு முறை அளவாக கருவாடு சாப்பிடச் சொல்வோம். பொதுவாக 90 வயது வரை வாழக் கூடியவர்களுக்கு 40 வயதில் சர்க்கரை நோய் வந்தால், அவர்கள் அடுத்த 50 ஆண்டுகள் பாதுகாப்பான வாழ்க்கை முறையில் வாழவும், சர்க்கரை நோயை நிரந்தரமாக கட்டுக்குள் வைத்திருக்கவும் கருவாட்டை அளவாக உண்பதுதான் நல்லது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x