Published : 22 Mar 2020 09:39 AM
Last Updated : 22 Mar 2020 09:39 AM

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் தோண்டத் தோண்ட கிடைக்கும் முதுமக்கள் தாழி- 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் தோண்டத் தோண்ட முதுமக்கள் தாழி கிடைத்து வருகிறது. மேலும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு நேற்று கண்டெடுக்கப்பட்டது.

கீழடியில் ஏற்கெனவே நடந்த 5 கட்ட அகழாய்வுகள் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்தது. தற்போது திருப்புவனம் அருகே கீழடியில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதில் 2 செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து அருகிலேயே மண்பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணி நடக்கிறது. இங்கு 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. ஒரு குழியில் 2 முதுமக்கள் தாழிகள், அடுத்த குழியில் 8 முதுமக்கள்தாழிகள், மூன்றாவது குழியில் 6 முதுமக்கள்தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஏராளமான மண்பானைகள், குடுவைகள், மணிகள், முதுமக்கள் தாழி மூடிகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் கொந்தகையில் 8 முதுமக்கள் தாழி இருந்த குழியில் மனித எலும்புக்கூடு ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. தற்போது வலது, இடது கைகளின் எலும்புகள் மட்டும் தெரிகின்றன. அதற்கு மேற்புறம் 2 சிறிய பானைகள் உள்ளன. அதை முழுமையாக தோண்டிய பிறகுதான் இறந்தவர்களை அமர்ந்த நிலையில் புதைத்தார்களா? அல்லது படுக்கைவசமாகப் புதைத்தார்களா? என்பது தெரியவரும்.

மேலும், இறந்தவர்கள் உண்பதற்காக பானைகளில் உணவுப் பொருட்கள் வைப்பது வழக்கமாக இருந்துள்ளது. அதற்காகத்தான் 2 பானைகள் வைத்துள்ளனர். எலும்புக்கூடு கிடைத்த நிலையில் அப்பகுதியை தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். விரைவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் எலும்புக் கூடுகள் மரபணு ஆய்வு செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x