

விருதுநகரில் நாய்களை பிடிப் பதற்காக வாங்கப்பட்ட வாகனம் குப்பை அள்ள பயன்படுத் தப்படுவதால் நகரில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
விருதுநகர் நகராட்சி பகுதி களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் நகராட்சி நிர்வாகம் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் தெரு நாய்களைப் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கருத்தடை செய்கின்றனர். பின்னர் அந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் கொண்டு வந்து விடப்படுகின்றன.
கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்கள் புண் ஆறாமல் தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் நாய்களுக்கு மட்டுமின்றி நாய்களைத் தொட்டு விளையாடும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
அதையடுத்து, கருத்தடை செய் யப்பட்ட நாய்களை பராமரிக்க விருதுநகர் இறைச்சி மார்க்கெட் பகுதியில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் நாய்கள் கவனிப்பு மையம் அண்மையில் கட்டப்பட்டது. மேலும், கருத்தடை செய்வதற்காக நாய்களைப் பிடித்து வரவும், கருத் தடை செய்யப்பட்ட பின்னர் நாய் களை கவனிப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லவும் ரூ.5.70 லட்சத்தில் நாய் பயண வாகனம் ஒன்றும் நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு வாங்கப்பட்டது.
(குப்பை அள்ள பயன்படுத்தப்படும் நாய் பிடிக்கும் வாகனம்)
ஆனால், இந்த வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த கூண்டுகள் அகற்றப்பட்டு குப்பை அள்ளும் வாகனமாக கடந்த இரண்டு மாதங்களாகப் பயன்படுத் தப்படு கிறது. இதனால், நாய்கள் பிடிக் கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதால் நகரில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
குறிப்பாக, அல்லம்பட்டி பகுதி, பாத்திமா நகர், அன்னை சிவகாமி நகர், பர்மா காலனி, முத்துராமன்பட்டி ஆத்துமேடு, பி.ஆர்.டி. டெப்போவை சுற்றியுள்ள பகுதி, வேலுச்சாமி நகர், இந்திரா நகர், மேற்கு மற்றும் கிழக்கு பாண்டியன் காலனி, நேருஜி நகர், கச்சேரி சாலை ஆகிய இடங்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சாலையில் நாய்கள் சண்டையிடுவதாலும் வேகமாக சாலையைக் கடப்பதாலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளை சந்திக்க வேண்டி யுள்ளது.
இந் நிலையில், பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பவுன்ராஜ்(50) தெரு நாய் கடித்து அண்மையில் காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி கடந்த 29-ம் தேதி பவுன்ராஜ் இறந்தார்.
உயிரிழந்த பவுன்ராஜ் 23-வது வார்டு கவுன்சிலராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்.சி. எடுக்கச் சென்ற வாகனங்கள்
இது குறித்து விருதுநகர் நகராட்சித் தலைவர் சாந்தி மாரியப்பனிடம் கேட்டபோது, குப்பை அள்ளப் பயன்படுத்தப்படும் இரு வாகனங்கள் எப்.சி. எடுக்க வேண்டியுள்ளதால் பழுதாகியுள்ள அந்த வாகனங்களை சரிசெய்ய மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குப்பைகளை அள்ளி வருவதற்கு ஒரு வேனும், குப்பைத் தொட்டிகளை எடுத்து வருவதற்கு ஒரு லாரியுமே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. பழுது நீக்க மதுரைக்கு அனுப்பி வைத்துள்ள வாகனங்கள் வந்ததும் நாய் பயண வாகனம் மூலம் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி தொடரும் என்றார்.