Published : 22 Mar 2020 09:03 AM
Last Updated : 22 Mar 2020 09:03 AM

இன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயரவில்லை

இன்று கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், காய்கறிகள் வாங்க சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

கோயம்பேடு சந்தையில் இன்று முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த சந்தையில் நேற்று காய்கறிகள் வழக்கமான விலையிலேயே விற்கப்பட்டன.

மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்தஅழைப்பை ஏற்று, அன்றைய தினம் கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படுவதாக வியாபாரிகள் அறிவித்திருந்தனர்.

வழக்கமாக இது போன்று கடையடைப்பு செய்யப்படுவதற்கு முந்தைய நாள், பொதுமக்கள் அதிக அளவில் காய்கறிகளை வாங்குவர். அதனால் அன்று வியாபாரிகள் சிலர் காய்கறி விலையை உயர்த்துவது வழக்கம். ஆனால் நேற்று காய்கறி விலை உயரவில்லை. வழக்கமான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.

அந்த சந்தையில் நேற்று, தக்காளி கிலோ ரூ.18, வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22, சாம்பார் வெங்காயம் ரூ.60, கத்தரிக்காய், கேரட், முருங்கைக்காய் தலா ரூ.25, அவரைக்காய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.35, முள்ளங்கி, புடலங்காய் தலா ரூ.20, பாகற்காய் ரூ.30, பீன்ஸ் ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.5, பீட்ரூட் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.15 என விற்கப்பட்டன.

இதுதொடர்பாக கோயம்பேடு சந்தை மலர், காய், கனி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, மக்கள் நலனுக்காக தான் கடையடைப்பு நடத்தப்படுகிறது. மக்கள் நலன் கருதியே காய்கறிகள் விலை உயர்த்தப்படவில்லை.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது பீன்ஸ், அவரைக்காய், பீட்ரூட் போன்ற காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கோடை நெருங்குவதால், வரத்து குறைந்து, அதனால் தான் விலை உயர்ந்தது. கரோனாவை காரணம் காட்டி வியாபாரிகளாக விலையை உயர்த்தவில்லை" என்றார்.

கரோனா விழிப்புணர்வு

கோயம்பேடு சந்தையில் பச்சை காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் சங்கத் தலைவர் ஆர்.ஜெய், கோயம்பேடு சந்தை முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன், புதினா, கொத்துமல்லி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.பி.பாலகிருஷ்ணன், கோயம்பேடு காய்,கனி, மலர் வியாபாரிகள் நலச்சங்க செயலர் டி.எம்.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று, தொழிலாளர்களுக்கும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கும், முக கவசம், சோப்பு, கிருமிநாசினி திரவம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி, முறையாக கைகளை கழுவுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x