மக்கள் ஊரடங்கு விருதுநகர் மாவட்டத்தில் பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தம்: 11 ஆயிரம் கடைகள் அடைப்பு

மக்கள் ஊரடங்கு விருதுநகர் மாவட்டத்தில் பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தம்: 11 ஆயிரம் கடைகள் அடைப்பு
Updated on
1 min read

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விருதுநகரில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளை தொடர்ந்து நம் நாட்டிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது மேலும் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன‌. இந்நிலையில் கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில் 22 ஆம் தேதி (இன்று) மக்களுக்காக மக்களால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது போல நாட்டு மக்கள் கருவி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.

அதை எடுத்து விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 419 அரசு பேருந்துகள், 121 தனியார் பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

விருதுநகர் வழியாக இயக்கப்பட்டு வந்த மதுரை- செங்கோட்டை, ஈரோடு- மயிலாடுதுறை, மும்பை விரைவு ரயில், ஈரோடு-சென்னை இடையே இயக்கப்பட்ட 30 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11,500 கடைகளில் கிராமப்புறங்களில் ஒரு சில பெட்டி கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகரப் பகுதிகளிலும் ஒரு சில பெட்டிக் கடைகள் மற்றும் டீக்கடைகள் மட்டுமே இயங்கின. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் விருதுநகர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடை வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in