

கல்லூரி சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கரோனா எச்சரிக்கை தீவிரமடைந்துள்ள சூழலில் தமிழக ஆசிரியர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற மாநில அரசு அனுமதிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுதும் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க பள்ளிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது தவிர பல்கலைக்கழகத்தேர்வுகளையும் யூஜிசி ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மத்தி மனிதவள மேம்பாட்டுத்துறை சமிபத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் கல்வி நிறுவனங்களை மூடவும், அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று இந்தியா முழுதும் மத்திய அரசின் கீழ் வரும் கல்லூரி, சிபிஎஸ்சி பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதே கோரிக்கையை ஆசிரியர் சங்கங்கள் வைத்து வருகின்றன ஆனால் தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் தாமதமாகவே முடிவெடுக்கப்பட்டது.
முதலில் எல்.கே.ஜி யூகேஜிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, பின்னர் மழலையர் பள்ளிகள், பின்னர் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கடந்த 17-ம் தேதியிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. உயர்கல்வித்துறையிலும் இதே அறிவிப்புதான் வெளியிடப்பட்டது.
நாடெங்கும் சமுதாய தனிமை கடைபிடிக்கப்படும்போது கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டப்பின்னர் ஆசிரியர்கள், பணியாளர்களை பணிக்கு வரச்சொல்வது என்ன நியாயம் என்கிற கேள்வி ஆசிரியர் சங்கங்களால் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மத்திய அரசின் ஆசிரியர்கள் , ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31-ம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தமிழக அரசும் பின்பற்றுமா என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.