துபாயில் இருந்து மதுரை வந்த 293 பேர் ரத்தப் பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு அனுப்பிவைப்பு: கரோனா அச்சத்தில் மக்கள்- மீண்டும் கோட்டைவிடுகிறதா சுகாதாரத்துறை?
துபாயில் இருந்து வந்த 293 பயணிகளுக்கு ரத்தபரிசோதனை செய்து, அவர்களுக்கு ‘கரோனா’ இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்யாமலேயே வீட்டிற்கு அனுப்பி வைத்ததால் அவர்கள் மூலம் இந்த வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
துபாயில் இருந்து நேற்று முன்தினம் 144 பயணிகள் விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களை விமான நிலையம் அருகே ஒரு கட்டிடத்தில் தனிமைப்படுத்தி அவர்களுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருக்கிறதா? என்ற சாதாரண மருத்துவபரிசோதனை செய்யபட்டது. ஒரு நாள் இரவு மட்டும் தங்க வைத்து, அவர்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, வந்தால் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கு பரவக்கூடும் எனவும் மருத்துவதுறையினர் கவுன்சிலிங் வழங்கினர்.
அதன்பிறகு அவர்கள் கையில் முத்திரையிடப்பட்டு பொதுநலன் கருதி வீட்டை விட்டுவெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளுடன் சுகாதாரத்துறை அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தது. ஆனால், அவர்களுக்கு துபாயில் ‘கரோனா’ தொற்று இல்லை என்று சான்றிதழ் பெற்று வந்ததால் அவர்களை சாதாரண பரிசோதனை செய்து அனுப்பிவிட்டதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.
‘கரோனா’வை பொறுத்தவரையில் ஒரிரு நாளில் கண்டுபிடிக்கக்கூடிய தொற்று நோய் இல்லை என்றும், அது ஒரு வாரத்திற்கு பிறகு அதன் இருப்பை காட்டும் என்றும் மருத்துவதுறையினரே கூறுகின்றனர்.
ஆனால், ஆய்வு மையத்திற்கு அனுப்பி எந்த ரத்தப்பரிசோதனையும் செய்யாமல் வீட்டிற்கு அனுப்பிவிட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் துபாயில் இருந்து 155 பயணிகள் வந்துள்ளனர். அவர்களுக்கும் இதே நடைமுறையை சுகாதாரத்துறையினர் கடைபிடிக்கின்றனர்.
‘கரோனா’வை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமே பரவி வருகிறது. அதனால் அவர்களை முழுபரிசோதனை செய்து அவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்தபிறகே வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுத்து இருக்க வேண்டும். ஆனால், அவர்களுடைய இந்த அலட்சியம் இத்தாலியை போல் ஒரிரு வாரத்திற்கு பிறகு ‘கரோனா’ அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.
சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், ‘‘அறிகுறி இல்லாமல் யாரையும் ரத்தமாதிரி எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தமாட்டோம். துபாயில் இருந்து வந்த 299 பேருக்கு அறிகுறி இருக்கிறதா என்று முழு உடல் பரிசோதனை செய்தோம்.
அதில், 60 வயதிற்கு மேலான 6 பேரை மட்டும் அவர்கள் வயது அடிப்படையில் கண்காணிப்பில் வைப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளோம். அவர்களுக்கும் அறிகுறி எதுவும் இல்லை. மீதி 293 பேருக்கு பரிசோதனை செய்ததில் அறிகுறி இல்லாததால் வீட்டிற்கு அனுப்பியுள்ளோம்.
அறிகுறி இல்லாமல் அனைவரையும் வைத்து, பராமரிப்பது சிரமம். அவர்களுடன் நாங்கள்(சுகாதாரத்துறை) தினமும் தொடர்பிலே இருப்போம். தினமும் போன் செய்து அவர்கள் உடல்நலத்தை விசாரிப்போம். அதில் சிறிது சந்தேகம் வந்தாலும் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிடுவோம், ’’ என்றனர்.
