

ராமநாதபுரத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கிருமி நாசினி தயாரிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
முதற்கட்டமாக அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு இவற்றை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் கொண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. எனவே, மக்கள் அடிக்கடி கிருமி நாசினி (Hand Sanitizer) மூலம் கைகளை கழுவுவதற்கு வலியுத்தப்பட்டுள்ளது.
தேவையைக் கருத்தில்கொண்டு அவற்றின் விலையை கிருமி நாசினி உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ளனர். மேலும் கிருமி நாசினிக்கு பல நகரங்களில் கடும் தட்டுப் பாடு நிலவுகிறது.
கிருமி நாசினிகள் தட்டுப்பாட்டை போக்கவும், குறைந்த விலையில் கை சுத்திகரிப்பான் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கை சுத்திகரிப்பான் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ. வீர ராகவ ராவ் கூறியதாவது,
கிருமி நாசினிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்த்திடும் நோக்கில் உலக சுகாதார நிறுவனம் (WHO) வரையறுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி எளிமையாக குறைந்த செலவில் கை சுத்திகரிப்பான் தயாரிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு மருத்துவர்கள், மருந்து தர ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 1,500 லிட்டர் கிருமி நாசினி தயாரித்து அவற்றை 500 மி.லி. அளவு பாட்டில்களில் அடைத்து மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு விநியோகித்திட திட்டமிடப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப கூடுதலாக கிருமி நாசினி தயாரித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.
எஸ். முஹம்மது ராஃபி