

தேனி மாவட்டத்தில் உள்ள மூன்று தமிழக எல்லைகள் மூடப்பட்டு பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
கேரளாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ளதால் தமிழக எல்லையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்காகக் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே குமுளிக்கு அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாய் குறைக்கப்பட்டது. குறிப்பாக கேரளாவிற்குச் செல்லும், அங்கிருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
இன்று சுயஊரடங்கு நாடுமுழுவதும் நடைபெறுவதால் நேற்று மதியம் தமிழக எல்லைகள் மூடப்பட்டன.
குமுளி அருகே லோயர்கேம்ப்பில் கேரளா, தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. இதற்காக ஏராளமான போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்யாவசியப் பொருட்களான பால், காய்கறி, காஸ், டீசல் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இது குறித்து ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் அறிக்கை: மருந்து, ஆம்புலன்ஸ், இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் இலகுரக வாகனம் போன்றவை மட்டுமே சோதனை சாவடியில் அனுமதிக்கப்படும். இந்த வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் நோய்தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வரும் 31-ம்தேதி வரை இந்த கட்டுப்பாடு இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதே போல் கம்பம்மெட்டு, போடி முந்தல் பகுதி வாகன சோதனைச் சாவடியும் மூடப்பட்டன. அத்யாவசிய தேவைக்காக மட்டும் குறிப்பிட்ட சில வாகனங்கள் கேரளாவிற்குச் சென்று வருகின்றன.
நேற்று கம்பம், சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தோட்ட வேலைக்காக குமுளிக்குச் சென்றனர். இவர்கள் கேரள எல்லைக்குள் நடந்து செல்ல முயன்ற போது போலீஸார் தடுத்துநிறுத்தினர். எல்லை மூடப்பட்டுள்ளது. எனவே யாரும் இப்பகுதியைக் கடக்கக் கூடாது என்று அறிவுறுத்தினர்.
அதற்கு தொழிலாளர்கள் சனிக்கிழமை என்பதால் சம்பளம் வாங்க வந்திருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை சுயஊரடங்கு இருப்பதால் இந்த சம்பளம் மூலம் சமையல் பொருட்களை வாங்க வேண்டும் என்றனர்.
இதனைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று மருத்துவ சோதனைக்குப் பிறகு இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வரும் 31-ம் தேதி வரை எஸ்டேட் வேலைக்காக கேரளாவிற்கு செல்லக்கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தினர்.
தமிழக எல்லையான லோயர்கேம்ப்பில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் குமுளி மலைப்பாதையில் 6 கிமீ. கடந்தே இப்பகுதியை வந்தடைகிறது.
இங்கு எல்லை மூடப்பட்டுள்ளதால் மீண்டும் இதே மலைப்பாதையில் வாகனங்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே குமுளியில் கேரளா போலீஸார் தமிழக எல்லை மூடல் குறித்த விபரங்களை கூறினால் தேவையற்ற அலைக்கழிப்பு குறையும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.