

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பான தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு ஹெல்ப் லைன் எண்ணை சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூட்டமாகக் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கோயில், தர்காக்கள், சர்ச்சுகள், திருமண விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாளை மக்கள் ஊரடங்கை ஒட்டி இன்று பிற்பகல் 3 மணி முதல் சென்னை எல்லையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்படுவதாகவும், பொதுமக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கரோனா குறித்த பல்வேறு சந்தேகங்கள், உதவிகளுக்கான ஹெல்ப் லைன் எண்ணை சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பு:
''பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவச் சேவைகள் துறையின் கீழ் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 18 நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. இம்மருத்துவமனைகளில் பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களை அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவச் சேவைகள் துறையின் சார்பில் கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு முகாமிலும் நான்கு மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளர்களைக் கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர்த்து பொதுமக்கள் அதிகம் கூடும் 31 பேருந்து நிறுத்தங்களில் இதேபோன்று சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இம்முகாம்களில் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் மருத்துவ அலுவலர்களால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக தங்களுக்கு அருகாமையிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளிலும், மற்றும் 044 - 2538 4520 என்ற சிறப்பு எண்ணிலும் தொடர்புகொண்டு சந்தேகங்கள் மற்றும் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்”.
இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.