Last Updated : 21 Mar, 2020 03:29 PM

 

Published : 21 Mar 2020 03:29 PM
Last Updated : 21 Mar 2020 03:29 PM

நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் யாருக்கும் கரோனா இல்லை; ஆய்வில் உறுதி: ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தாக்கம் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 12 நோயாளிகளை பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கும் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். 12 பேரின் ரத்த, சளி மாதிரிகள் சேமிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆய்வு முடிவில் ஒருவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதாக அவர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சி அலுவலகம், வள்ளியூர் பேருந்து நிலையம் வள்ளியூர் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வரும் கரோனா வைரஸ் தொடர்பாக நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொடர்பாக அனுமதிக்கப்பட்ட 12 நோயாளிகளை பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கும் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தாக்கம் இல்லாத காரணத்தால் வீடு திரும்பினாலும் கூட அவர்கள் சுகாதாரத்துறையின் பார்வையில் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

வள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து தூய்மைப் பனியாளர்களுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கையில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது. பொதுமக்களிடம் நோய் தடுப்பு தொடர்பாக வீடு வீடுகாகச் சென்று விழிப்புணர்வு எற்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தூய்மை பணிகளில் ஈடுபடும்போது வெளியூர் அல்லது வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சல், இருமல். சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

பின்னர், வள்ளியூர் பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடிகளை வழங்கி ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துகொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் வெளியூரில் இருந்து வந்த பேருந்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பனிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.

வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் கரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள், நோய் பரவும் விதம், அதனை எவ்வாறு கையாள வேண்டும், முறையாக கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு இருக்கிறதா என்பதைக் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்கிறார்களா என்றும் செவிலியர்கள் காய்ச்சல், இருமல்,போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்க்கொண்டார்.

நாங்குநேரி சுங்கச்சாவடியில் வெளி மாநில வாகனங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு மேற்க்கொண்டார். மேலும் வெளி மாநில வாகனங்களில் இருந்து வந்த பயனாளிகளிடம் நோய் குறித்து சுகாதாரத்துறையின் மூலம் நியமிக்கப்பட்ட அலுவலர் சோதனை மேற்க்கொண்டு நோய் பரிசோதனை செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

வெளி மாநில பயனாளிகளுக்கு கரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குற்றாலிங்கம், துனை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.வரதராஜன், உதவி செயற்பொறியாளர் வாசுதேவன், வள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கிறிஸ்டோபர், திசையன்விளை வட்டாச்சியர் செல்வன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x