

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்தை எரித்து 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக் கறிஞர்களை நியமிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது 2007 மே 9-ம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசி எரிக்கப்பட்டது. இதில் ஊழியர்கள் வினோத்குமார், கோபிநாத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அட்டாக் பாண்டி, டி.எஸ்.பி. ராஜாராம் உட்பட 17 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன் றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப் பட்ட 17 பேரும் 2009 டிசம்பர் 9-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. மேலும், இவ்வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரி, சம்பவத்தில் இறந்த ஊழியர் வினோத்குமாரின் தாயார் பூங்கொடி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனியாக மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. எதிர்மனுதாரர்கள் அட்டாக் பாண்டி உட்பட16 பேருக்காக தாங்கள் ஆஜராக விரும்பவில்லை எனக் கூறி வழக்கறிஞர்கள் வீரகதிரவன், கருணாநிதி உள்ளிட்டோர் தாங்கள் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த வக்காலத்தை திரும்பப் பெற்றனர். 17-வது எதிர்மனுதாரர் டி.எஸ்.பி. ராஜாராம் தரப்பில் வழக்கறிஞர் ஜெகதீஸ் பாண்டியன் ஆஜரானார்.
அட்டாக் பாண்டி உட்பட 16 பேர் சார்பில் ஆஜராக இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக் கறிஞர்களை நியமிக்குமாறு பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை வரும் செப்டம்பர் 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.