

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சுய ஊரடங்கைக் கடைபிடிக்க பிரதமர் நரேதிர மோடி கேட்டுக் கொண்டுள்ள நிலையில் மதுரையில் நாளை (22 மார்ச்) நடைபெறவிருந்த 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 2,76,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,406 பேர் மரணமடைந்துள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 275 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளனர்.
இதனையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி, இந்நோய் தடுப்பு குறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், நாளை (மார்ச் 22), ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
கரோனாவை எதிர்கொள்ள அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானது என்றும் அதனால் மக்கள் பொறுப்புடன் தங்களைத் தாங்களே கூடுமானவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், நாளை (மார்ச்.22) மதுரையில் நடைபெறவிருந்த 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மொத்தம், 42 பெரிய திருமண மண்டபங்கள் உள்ளன. இதுதவிர சிறிய திருமண மண்டபங்கள் பலவும் உள்ளன. நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் பல திருமணங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.
தமிழக அரசின் உத்தரவை அடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், கூடலழகர் பெருமாள் கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்களில் மார்ச் 31 வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் ஏற்கெனவே ரத்தாகின.
தற்போது தனியார் மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தாங்கள் மேற்கொண்ட லட்சக்கணக்கு செலவுகளையும் பொருட்படுத்தாமல் சமுதாய நலன் கருதி திருமணங்களை தாமாக ரத்து செய்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏற்கெனவே கேரளாவில் புதிதாக திருமணத் தேதிகள் குறிக்க வேண்டாம். ஏற்கெனவே திட்டமிட்ட திருமணங்களை மட்டும் அதிக கூட்டம் கூடாமல் நடத்துமாறு உத்தரவுள்ளது.