Published : 21 Mar 2020 12:05 PM
Last Updated : 21 Mar 2020 12:05 PM

சாத்தூர் வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் பட்டாசு ஆலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று, சிவகாசி பட்டாசு வெடி விபத்து தொடர்பாக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பேசிய திமுக எம்எல்ஏ. தங்கம் தென்னரசு, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, "சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 9 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூபாய். 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு ரூ.50000 நிதி உதவி வழங்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்"என்றார்.

பலி அதிகரிக்க வாய்ப்பு:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு ஆலை கட்டிட இடிபாடுகளில் சிக்கி குருசாமி (50) என்பவரது உடலை ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் இன்று காலை மீட்டனர். உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்தில் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையும் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் விவரம்:

தென்காசி மாவட்டம் மைப்பாறையைச் சேர்ந்த ராணி (42), ஜெயபாரதி (45), பத்ரகாளி (33), வேலுத்தாய் (34), தாமரைச்செல்வி (32) தங்கம்மாள் (39) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஒருவர் முருகையா என அடையாளம் தெரிந்தது. மற்றொரு நபரின் அடையாளம் தெரியவில்லை. இந்நிலையி, இன்று காலை சிப்பிப்பாறையைச் சேர்ந்த குருசாமி (50) கட்டிட இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சுப்பிரமணியன் (60), பொன்னுத்தாய் (48), சுப்பம்மாள் (60), அய்யம்மாள் (62), மாடசாமி (25), பேச்சியம்மாள் (49), முருகலட்சுமி (37), ஜெயராம் (57) ஆகியோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x