

தென்காசி மாவட்டம் தமிழக - கேரள எல்லை பகுதியான புளியரை சோதனைச்சாவடி , எல்லைப் பாதை இன்று காலை மூடப்பட்டது. பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களுக்கும் அனுமதி உண்டு.
ஏற்கெனவே, பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலால், கேரள மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியான புளியரையில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
புளியரையில் கால்நடை பராமரிப்புத் துறையினர் வாகனங்களை கண்காணித்து, கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே அனுப்பி வைத்து வந்தனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இது நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கேரளா உட்பட தென் மாநிலங்களுடனான எல்லைகளை வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழக - கேரள எல்லை பகுதியான புளியரை சோதனைச்சாவடி , எல்லைப் பாதை இன்று காலை மூடப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. முறையான சோதனைக்குப் பின்னரே அவை அனுமதிக்கப்படுகின்றன.
அப்படியான வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய்த்தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதோடு வாகனங்களும் நோய்த்தடுப்பு நடிவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.