

டெல்லியில் நிர்பயா கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன்புபுதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி அபர்ணாவுக்கு நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவரது பெற்றோர் உள்ளனர்.
புதுக்கோட்டையில் கடந்த 2011-ல் கலைக்குமார், ராஜம் தம்பதியரின் மகள் 9-ம் வகுப்பு மாணவி அபர்ணா(14) கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அவர்களாலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ-யும் கைவிரித்ததை அடுத்து எந்த முடிவும் இல்லாமல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து அபர்ணாவின் தந்தை கலைக்குமார், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
நானும், என் மனைவி ராஜமும் ஆசிரியர்கள் என்பதால், 2011 மார்ச் 9-ம் தேதி பள்ளிக்குச் சென்றுவிட்டோம். அன்று அபர்ணா, அவரது தம்பி நிஷாந்த்(5) ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அபர்ணாவை கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
முன்னாள் எம்எல்ஏவின் மகன் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என சென்னை தடயவியல் சோதனை முதுநிலை அலுவலர் எ.ருபாலி அறிக்கை கொடுத்தும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
சிபிஐ கைவிரிப்பு
இதற்கிடையில் சிபிஐயும் கைவிரித்தது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து, இழப்பீடாக ரூ.1 கோடி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையில் உள்ளது.
இதுதவிர, இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்.
இவ்வழக்கில் நீதி கேட்டுமறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் வீட்டுக்கே சென்று 6 முறை மனு அளித்தேன். பல்வேறு துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், டிஜிபி-க்கள் என ஏராளமானோரிடம் மனு அளித்தும் நீதி கிடைக்கவில்லை.
நிர்பயாவை கொலை செய் தோரை தூக்கில் தொங்கவிட்டது வரவேற்கத்தக்கது. அதே நாட்டில், அதற்கும் முந்தைய ஆண்டு வீட்டுக்குள் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த மாணவிஅபர்ணாவை கொலை செய்தவர்கள் யாரென்றுகூட கண்டுபிடிக்க முடியாமல் போனது எங்கள் குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்திஉள்ளது. தாமதிக்கப்பட்டாலும் என்றோ ஒரு நாள் அபர்ணாவுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார்.