

கரோனா வைரஸ் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாத நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தீபலட்சுமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை மாவட்டஆட்சியர் சிவன் அருள் தீவிரப்படுத்தி வருகிறார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, நாட்றாம்பள்ளி, ஆம்பூர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அரசுமருத்துவமனையில் ஆட்சியர் சிவன் அருள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ்தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாதது தெரியவந்தது.
இதுகுறித்து தலைமை மருத்துவர் தீபலட்சுமியிடம் ஆட்சியர் விளக்கம் கேட்டபோது, அவர் உரிய பதில் கூறவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மருத்துவத் துறை இணை இயக்குநர் யாஸ்மினின் அறிக்கையின்பேரில், மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தீபலட்சுமியை ஆட்சியர் சிவன் அருள் பணியிடை நீக்கம் செய்துஉத்தரவிட்டார். அந்த பணியிடத்துக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்வகுமார் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.