Published : 21 Mar 2020 08:25 AM
Last Updated : 21 Mar 2020 08:25 AM

தேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி புதிதாக 7 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரியும், தமிழகத்தில் புதிதாக 7அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 110-வது விதியின்கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முதல்கட்டமாக ரூ.60 கோடியில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கன்னியாகுமரி மாவட்டம், ஹெலன் நகர், ராஜாக்க மங்களம், கொட்டில்பாடு ஆகிய கிராமங்களில் ரூ.39.90 கோடியில் மீன்இறங்கு தளங்கள் அமைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை காரணங்களால் மூடாதவாறு இருக்க ரூ. 27 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி துறைமுகத்தின் படகு அணையும் தளம் ரூ.25 கோடியில் நீட்டிக்கப்பட்டு, கூடுதல் படகுகள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு, மண்டபம் தெற்கு கிராமங்களில் ரூ.20 கோடியில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும். கடலூர் மாவட்டம் அண்ணன்கோயில், புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ. 10 கோடியில் புனரமைக்கப்படும். முடசலோடை கிராமத்தில் உள்ள மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக ரூ. 9.50 கோடியில் நீட்டிக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம், புதுக் குப்பம், உய்யாலி குப்பம் கிராமங்களில் ரூ.17 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.

ரூ. 1.60 கோடியில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்படும். ரூ.3.50 கோடியில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், ரூ.3 கோடியில் 5 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாகவும், ரூ.1.20 கோடியில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.

கிராமப்புறங்களில் நாட்டுக் கோழி வளர்ப்பை வணிக ரீதியில்மேற்கொள்ளும் 1,925 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தலா 1,000 கோழிக் குஞ்சுகள், ஒரு மாதத்துக்கான கோழித் தீவனம், குஞ்சு பொரிப்பகம் அமைத்துக் கொடுக்க ரூ.14.73 கோடி வழங்கப்படும். விவசாயிகளின் பொருளாதார இழப்பை தவிர்க் கும் வகையில் 90 லட்சத்து 35 ஆயிரம் கால்நடைகளுக்கு ரூ. 22.03 கோடியில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்.

ரூ. 18.03 லட்சத்தில் ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்புமருந்து நிலையத்தில் உள்ளஆட்டம்மை தடுப்பூசி மருந்துஉற்பத்திப் பிரிவு தரம் உயர்த்தப்படும். தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை வீதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும், உயர் கல்வித் துறைமூலம் 7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும்.

கோரிக்கைகளை ஏற்று..

வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று கடந்த 13-ம் தேதி அறிவித்திருந்தேன். பல்வேறு தரப்பினரிடம் இருந்தும், பெற்றோர்களிடம் இருந்தும் வந்த கோரிக்கைகளை ஏற்று ஏற்கெனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக, 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேலும் 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x