

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 இளைஞர்களுடன் தொடர்பில் இருந்த 81 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முதல் நபராக கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 45 வயதான காஞ்சிபுரம் பொறியாளர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், கடந்த 12-ம்தேதி டெல்லியில் இருந்து ரயில்மூலம் சென்னை வந்த உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கும், 17-ம் தேதி அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயதான எம்பிஏ மாணவருக்கும் வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரயிலில் வந்த இளைஞர்
உத்தரப்பிரதேச மாநில இளைஞர் சென்னை வந்து அரும்பாக்கத்தில் தங்கியிருந்ததால், அவருடன் இருந்த 7 நண்பர்கள், குடியிருப்பில் பழகிய 50 பேர் மற்றும் டெல்லியில் இருந்து சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் எஸ்-5 கோச்சில், அந்த இளைஞருடன் இருந்த 10 பேர் என மொத்தம் 67 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
இதேபோல், அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த மாணவர், இருசக்கர வாகனத்தில் நண்பருடன், வில்லிவாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த மாணவருடன் தொடர்பில் இருந்த 14 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த 2 இளைஞர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் சிறப்பு முகாம், வீடு மற்றும் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். தேவைப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.