

சட்டப்பேரவை கூட்டம் நடந்தால்தான் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபூபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
கரோனா வைரஸ் தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இதுவரை 4 முறை கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தி நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், நிலைமைக்கு ஏற்றாற்போல் நடவடிக்கை எடுக்கவும் தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், சுற்றுலா, ஆன்மிக தலங்கள், வாரச் சந்தைகள், மிகப் பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து விமான, ரயில், பேருந்து நிலையங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 2 லட்சம் பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,984 பயணிகள் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 32 பயணிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு ஒருவர் வீடு திரும்பியுள்ளார்.
மாநில எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்துதீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதமர் வெளியிட்ட 9 அம்ச நோய்த் தடுப்பு வழிமுறைகளை தமிழக அரசு தீவிரமாக கடைபிடித்து வருகிறது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பல்வேறு துறைகளுக்கு ரூ.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு சிரமங்களுக்கிடையே கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டு வரும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றுஎதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவைக் கூட்டம்நடந்தால்தான் நாட்டின் நிலைமையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். அதற்காகத்தான் பேரவை கூடுகிறது. மக்கள் பிரச்சினைகளை இங்கேதான் விவாதிக்க முடியும். சட்டப்பேரவை நடப்பதால்தான் பிரச்சினைகளை தெரிவிக்கிறீர்கள். அதற்குண்டான நடவடிக்கைகள் அரசு எடுக்கிறது.
சட்டப்பேரவையில் நாம் கூடியிருப்பதால் நோய் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. ஏனெனில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளவர்கள்தான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து யாரும் பாதிக்கப்படவில்லை. தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.