

கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தோலிக்க தேவாலயங்களில் மார்ச் 31-ம் தேதி வரைஅனைத்து விதமான வழிபாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்றுபரவாமல் தடுக்கும் வகையில்தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் அந்தந்த மறைமாவட்ட ஆயர் மூலமாக மும்பையில் உள்ள கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கேட்டுக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக கடந்த வாரம் சுற்றறிக்கையும் அனுப்பியிருந்தார்.
அதில் கூறப்பட்டுள்ளபடி, கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலியின்போது பக்தர்களுக்கு நற்கருணை கைகளில் வழங்கப்படுகிறது. திராட்சை ரசம் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. தேவாலய நுழைவாயிலில் தீர்த்த தண்ணீரும் வைக்கப்படவில்லை.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களில் மார்ச் 31 வரைபக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று கத்தோலிக்க தேவாலயங்களில் மார்ச் 31 வரை அனைத்து வழிபாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
நுழைவாயிலில் அறிவிப்பு
ஆலயங்களில் தினமும் நடக்கும் திருப்பலி இருக்காது. தவக்காலத்தில் மேற்கொள்ளும் திருயாத்திரை, தியானம் போன்ற நிகழ்வுகளும் இருக்காது.
மார்ச் 31 வரை வழிபாடுகள் நிறுத்தப்படுவது தொடர்பான அறிவிப்பு தேவாலயங் களின் நுழைவாயிலில் அறிவிப்பாக வைக்கப்பட்டுள்ளது.