Published : 21 Mar 2020 07:51 AM
Last Updated : 21 Mar 2020 07:51 AM

முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தமிழக - ஆந்திர எல்லையில் அமைச்சர்கள் ஆய்வு- வாகனங்களில் கிருமிநாசினி தெளித்தனர்

திருத்தணி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த வாகனங்களில் அமைச்சர்கள் கிருமி நாசினி தெளித்தனர்

திருத்தணி

திருத்தணி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி அருகே தமிழகம் - ஆந்திரஎல்லையில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நேற்று காலை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமாரும், க.பாண்டியராஜனும், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த வாகனங்களில் தாங்களே முன்னின்று கிருமிநாசினி தெளித்து, வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு கரோனா வைரஸ்தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், காவல்துறை வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் கரோனா வைரஸ் தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அமைச்சர்களின் இந்த ஆய்வின்போது, அரசு கூடுதல் தலைமை செயலாளர் (வருவாய்த் துறை) அதுல்யா மிஷ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் டி.ஜெகன்நாதன், திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி, திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன், திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வின்போது வருவாய்,அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் உள்ள 86 சோதனைச்சாவடிகளில் மனிதர்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு,வெளிமாநில வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 48,824 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் பயணம் செய்த 1,11,009 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவருக்குக் கூட கரோனா அறிகுறி கிடையாது.

தமிழகத்தில் உள்ள 59,435 பள்ளிகளும், 52,967 அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 2,319கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், மருத்துவத் துறைசார்ந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தவிர 2,184 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.

15,439 பொது இடங்கள் தூய்மை

மாநிலத்தில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆட்டோஸ்டாண்ட் உள்ளிட்டவை அடங்கிய 15,439 பொதுஇடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சி துறை, நகராட்சித் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இரவு,பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து, சுய கட்டுப்பாட்டை கடைபிடித்தாலே கரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து விடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x