

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் 3 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநகராட்சி சார்பில் புதிதாக வாங்கப்பட்ட 208 நவீன விசைத் தெளிப்பான்கள் களப்பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கிய சாலைகள், சந்திப்புகளில் முறைப்படி கை கழுவும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல, கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிப்பதற்காக ஏற்கெனவே வாங்கப்பட்டிருந்த நவீன 208 விசைத் தெளிப்பான்களை களப்பணிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று விசைத் தெளிப்பான்களை அனுப்பிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாநகரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக மாநகராட்சியின் வடக்கு வட்டாரத்துக்கு 66 விசைத் தெளிப்பான்கள், மத்திய வட்டாரத்துக்கு 66, தெற்கு வட்டாரத்துக்கு 68 என மொத்தம் 200 விசைத்தெளிப்பான்கள், டிராக்டருடன் இணைக்கப்பட்ட ஒரு பட்டர்ஃபிளை வாகன தெளிப்பான், 7 பெரிய புகை பரப்பும் வாகனங்கள் என மொத்தம்208 கிருமி நாசினி இயந்திரங்கள் களப்பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றைக் கொண்டு முக்கிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படும். இப்பணியில் மொத்தம் 3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக அரசின் உத்தரவுப்படி, வழிபாட்டுத் தலங்கள், அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களுக்குச் செல்வது, பயணங்கள் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு ஆணையர் கோ.பிரகாஷ் கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர்கள் பி.குமாரவேல் பாண்டியன் (பணிகள்) பி.மதுசூதன் ரெட்டி (சுகாதாரம்), கிரேஸ் லால்ரின்டிகி பச்சுவாவ் (கல்வி), வட்டார துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், பி.என். ஸ்ரீதர், பி.ஆகாஷ், தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.