Published : 20 Mar 2020 08:36 PM
Last Updated : 20 Mar 2020 08:36 PM

மார்ச் 23 முதல் ஏப்.3 வரை சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் இயங்காது: அவசரத் தேவை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்? - பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு

கரோனாவைரஸ் பரவலைத் தொடர்ந்து மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் (அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் உள்பட) வரும் 23 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 3 ஆம் தேதிவரை முழு அளவுடன் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முக்கிய விஷயமாக இருப்பதால், காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறி உள்ளவர்கள் பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையங்கள் அல்லது அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மிக அவசரத்தேவை உள்ளவர்கள் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு முன்னர் வரலாம்.

பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு வருமாறு ஏற்கனவே அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு பின்னர் தங்களது வருகையை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாற்றியமைத்தலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு (ராயலா டவர்ஸ் அண்ணாசாலை சென்னை) வரவேண்டியவர்களும் தங்களது வருகையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்குப் பின்னர் ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அனைத்து விவரங்களுக்கும் 044-28513639, 044-28513640 ஆகிய தொலைபேசி எண்களையோ, அல்லது rpo.chennai@mea.gov.in என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதனால் ஏற்படும் சிரமத்துக்கு வருந்துவதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x