

விஜய் பாடலுக்கு நடனமாடி தோழி, சகோதரன் அமைப்புகளைச் சேர்ந்த திருநங்கைகள் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 .5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,984 பேர் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரோனா பாதிப்பு குறித்தும், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் காவல்துறை, பொதுமக்கள், தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த்பாபு மற்றும் நுங்கம்பாக்கம் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் ராஜா ஆகியோர் முன்முயற்சியில் இன்று விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சூளைமேடு, நமச்சிவாயபுரம் பகுதிகளில் உள்ள சாலைகளில் தோழி, சகோதரன் அமைப்புகளைச் சேர்ந்த திருநங்கைகள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 'பிகில்' படத்தில் விஜய் பாடிய நெஞ்சுக்குள்ளே குடியிருக்கும் பாடலில் வரும் ''இன்னா இப்ப லோக்கலு நான். நம்ம கெத்தா உலாத்தணும். நாம அழுக்கா இருப்போம், கறுப்பா களையா இருப்போம'' பாடல் வரிகளுக்கு ஏற்ப நடனமாடி பொதுமக்களைக் கவர்ந்தனர். பிறகு, பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துக் கூறி துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர்.