

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் சுற்று அடிப்படையில் வீடுகளில் இருந்து பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளனர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் வரும் 22-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் "ஜனதா ஊரடங்கு" பிறப்பிக்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கரோனா தொற்றை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி எடுத்துரைத்தார்.