

துபாயில் கரோனா பாதிப்பால் மீன்பிடி தொழில் முடங்கியுள்ள நிலையில் தொழிலின்றி தவிக்கும் 13 தமிழக மீனவர்கள் தங்களை மீட்கக்கோரி உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வாட்ஸ் அப் வீடியோ ராமநாதபுரத்தில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் என 13 மீனவர்கள், துபாய் நாட்டிற்கு மீன்பிடி ஒப்பந்த கூலிகளாக கடந்த ஓராண்டிற்கு முன்பு சென்றுள்ளனர்.
தற்போது துபாயில் கரோனா பாதிப்பு உள்ளதால் அவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமல், தங்கும் அறையில் முடங்கிக் கிடக்கின்றனர்.
சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பணியாற்றும் நிறுவன முதலாளியிடம் கேட்டும் அனுமதிக்கவில்லை என்று வருத்தப்பட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், தங்களது பாஸ்போர்ட் மற்றும் மொபைல் போன்களை முதலாளிகள் பறித்து வைத்துக் கொண்டதால் வேறு நண்பர்களின் மொபைல் போன்கள் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் கடல் தொழிலாளர் சங்கம்(சிஐடியு) மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்திக்கும் தகவலை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வாட்ஸ்அப் வீடியோ பதிவில் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என உருக்கமாகவும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து எம்.கருணாமூர்த்தி, ”கரோனா வைரஸ் பரவாமல் இருக்க துபாய் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையால், அங்கு மீன்பிடித் தொழில் பெருமளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மீன்பிடி ஒப்பந்த கூலிகளாக சென்று அங்கு தொழில் செய்து வந்த ஏராளமான வெளிநாட்டவர் சொந்த நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அதே சூழலில் துபாயில் சார்ஜா அமெரியா என்ற இடத்தில் மீன்பிடி ஒப்பந்த கூலியாகச் சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 9 பேர் உள்ளிட்ட 13 தமிழ் மீனவர்கள், சொந்த ஊர் திரும்ப சம்மந்தப்பட்ட படகு உரிமையாளர், அவர்களின் பாஸ்போர்ட்டை கொடுத்து சென்னை அனுப்பி வைக்க மறுத்து வருகிறார்.
அப்படி அனுப்புவதானால் ஒவ்வொரு மீனவரும் இந்திய ரூபாயில் தலா ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நம் மீனவர்கள் 13 பேரும் சொந்த ஊர் திரும்ப இயலாத நிலையில் உள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, 13 மீனவர்களும் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.