கரோனா அச்சத்தால் வீழ்ந்த மதுரை மல்லிகை விலை: கிலோ ரூ.250-க்கு விற்பனை 

கரோனா அச்சத்தால் வீழ்ந்த மதுரை மல்லிகை விலை: கிலோ ரூ.250-க்கு விற்பனை 
Updated on
1 min read

மதுரையில் கிலோ ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்ற மதுரை மல்லிகைப்பூ, தற்போது ‘கரோனா’ வைரஸ் அச்சத்தால் மக்கள், வியாபாரிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் இன்று கிலோ 250-க்கு விலை சரிந்தது.

மதுரை மல்லிகைப்பூக்கு உள்ளூர் சந்தை முதல் உலக சந்தைகள் வரை வரவேற்பு உண்டு. மதுரையில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூ, விமானங்கள் மூலம் சிங்கபூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு நறுமணப்பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதியாகிறது.

அதனால், ஆண்டு முழுவதுமே மதுரை மல்லிகைப்பூ பற்றாக்குறையாகவே இருக்கும். சாதாரண நாட்களிலேயே கிலோ ரூ.1500 வரையிலும், விழாக் காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் கிலோ ரூ.3000-க்கும், சில வேளைகளில் ரூ.4,000 வரையும் விலை கூடிவிடும்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை குறைய ஆரம்பித்தது.இன்று கிலோ ரூ.250க்கு விலை சரிந்ததால் வியாபாரிகள், விவசாயிகள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரி மனோகரன் கூறுகையில், ‘‘ஒரு நாளைக்கு தற்போது 5 டன்னுக்கு மேல் மல்லிகைப்பூ விற்பனைக்கு வருகிறது.

வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் ஒட்டுமொத்த மல்லிகைப்பூவும், தமிழகம் முழுவதும் உள்ள உள்நாட்டு சந்தைகளுக்கு விற்பனைக்குச் செல்கிறது.

ஆனால், ‘கரோனா’ அச்சத்தால் மக்கள், வியாபாரிகள் பூக்களை வாங்க வர ஆர்வம் காட்டவில்லை. அதனால், காலை 11 மணிக்கெல்லாம் விற்று தீர்ந்துவிடம் மல்லிகைப்பூ விற்பனையாகாமல் தேக்கமடைகிறது. இந்த பிரச்சினை கடந்த ஒரு வாரமாக உள்ளது. அதுபோல், ரோஜா பூ விலையும் கிலோ 60-க்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது, ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in