Published : 20 Mar 2020 03:02 PM
Last Updated : 20 Mar 2020 03:02 PM

கரோனா எதிரொலி: மதுரையிலிருந்து செல்லும்11 விமானங்கள் ரத்து; பெரிய கோயில்கள் மூடல், போராட்டங்கள் ஒத்திவைப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரையிலிருந்து உள்நாட்டு சேவைக்கான விமானங்கள் 8, வெளிநாட்டு சேவைக்கான விமானங்கள் 3 என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு சேவைகளுக்காக 18 விமானங்கள் இயங்கி வந்தன. கரோனா வைரஸ் எதிரொலியால் முதற்கட்டமாக 5 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது மேலும் 3 விமானங்களும் ரத்தாகியுள்ளன.

இதன்மூலம் மதுரையிலிருந்து மொத்தம் 8 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் 4, இன்டிகோ விமானம் 3 , ஏர் இந்தியா விமானம் ஒன்று அடங்கும்.

இதுதவிர வெளிநாட்டு சேவைக்கான ஸ்பைஸ்ஜெட் விமானம் உட்பட கொழும்பு செல்லும் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று மட்டும் மதுரை வரும் எனத் தெரிகிறது.

கரோனா வைரஸ் எதிரொலியால் விமான நிறுவனங்கள் படிப்படியாக தனது சேவைகளைக் குறைத்து வருகின்றன. மேலும் விமான நிலையத்தில் பார்வையாளர்கள் பயணிகளை வரவேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படும் மதுரை விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

மதுரையில் போராட்டங்கள் ரத்து..

கரோனா பரவும் சங்கிலியை உடைக்க பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களைக் கைவிடுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெறும் தர்ணா போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், இன்று மதியம் 1.45 மணிக்கு ஜின்னா திடலிருந்து மதுரை ரயில்வே ஸ்டேஷன் வரை நடைபெறவிருந்த பேரணி தற்காலிமாக ஒத்திவைப்பதாக போராட்டக்குழுவினர் அறிவித்தனனர்.

மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், கூடலழகர் பெருமாள் கோயில்கள் மூடல்:

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில் உட்பட திருப்பரங்குன்றம் ஆகிய தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் பக்தர்களும் கோவில் வாசலிலே சூடம், தீபம் ஏற்றி வழிபட்டு திரும்பிச் சென்றனர்.

கிருமி நாசினி தயாரிப்பு நிகழ்ச்சி..

கரோனா வைரஸ் காய்ச்சல் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு சார்பாக மதுரையில் இருக்கும் சுய உதவிக் குழுக்கள் மூலம் கைகளைச் சுத்தப்படுத்தும் கிருமி நாசினி தயாரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னதாக நேற்று பிரதமர் மோடி வரும் ஞாயிரன்று மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியிருந்தார். இதனை கடைபிடிக்கும் வகையில், மதுரை மாட்டுத்தாவணி பூ, உரம், நெல் சந்தைகள் மார்ச் 22 -ல் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x