

ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக இளங்கோவனை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று காலை முதல் இளங்கோவனை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இளங்கோவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம்
இளங்கோவனை கைது செய்யக் கோரி சென்னை உட்பட தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இளங்கோவன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை நந்தம்பாக்கத்தில் செல்போன் கோபுரம் மீது ஏறி அதிமுக தொண்டர்கள் இருவர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 7 மணிக்கு ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞர் நந்தம்பாக்கம் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் வில்வமூர்த்தியும் செல்போன் கோபுரம் மீது ஏறினார். அவர்களை சமாதனப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால் ராட்சத கிரேன் மூலம் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீட்கப்பட்டார்.
மேம்பாலம் மீது ஏறி மேயர் மிரட்டல்
பிரதமர்- முதல்வர் சந்திப்பை விமர்சித்த இளங்கோவனை கண்டித்து நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை நெல்லை மேயர் புவனேஸ்வரி தலைமையில் அதிமுகவினர் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். பின்னர் ஊர்வலமாக சென்று தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் சுவரில் மேல் ஏறிய புவனேஸ்வரி இளங்கோவனை கைது செய்ய கோரி கோஷமிட்டார். கைது செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அவரை போலீஸார் மீட்டனர்.
உருவபொம்மை எரிப்பு
கோவை மாவட்டம் இடையர்பாளையம் பகுதியில் திரண்ட அதிமுகவினர், இளங்கோவன் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துவந்து எரித்தனர்.