

தேனி கைலாசபட்டி, கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் போது டிஎஸ்பிகளாக பணிபுரிந்த உமாமகேஸ்வரி, சேது மற்றும் ஆய்வாளர்கள் இளங்கோவன், செல்லப்பாண்டியன் ஆகியோரை குற்றவாளியாக சேர்க்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வழக்கு தொடர்பான விசாரணையை கீழமை நீதிமன்றம் 3 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் டி.கள்ளிப்பட்டி அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்தார். அவர் 7.12.2012 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
இவரை தற்கொலைக்கு தூண்டியதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா உள்பட பலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தென்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தற்போது திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் கைலாசபட்டி, கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் போது டிஎஸ்பிக்களாக பணிபுரிந்த உமாமகேஸ்வரி, சேது மற்றும் ஆய்வாளர்கள் இளங்கோவன், செல்லப்பாண்டியன் ஆகியோரை குற்றவாளியாக சேர்க்கக்கோரி தற்கொலை செய்து கொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவினைத் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரரும் மிகவும் தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளார் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் முடிக்கவும் உத்தரவிட்டார்.